search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர் அப்பாவு"

    • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 10 முறை சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை.
    • பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்தது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு நகலும் அளிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து பலமுறை கடிதம் கொடுத்தும், தெளிவுபடுத்தியும் தீர்வு காணவில்லை. சபாநாயகர் தனக்கான மரபை கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகலை சபாநாயகரிடம் கொடுத்தும் ஏற்கவில்லை. புனிதமான இருக்கையில் உள்ள அவர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும்.

    மக்கள் பிரச்சனைகளுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் தருவதற்கு முன்பே சபாநாயகரே பதில் சொல்கிறார். அமைச்சர்கள் பதில் அளிப்பது இல்லை.

    சட்டசபையில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை. சபாநாயகர் தனது மரபை மீறி செயல்படுகிறார். சட்டமன்ற பேரவை மரபின்படி ஒவ்வொரு கட்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் இருப்பது மரபு. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 10 முறை சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணைய அங்கீகாரம் உள்ளிட்ட ஆதாரங்கள், ஆவணங்களை அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த காலங்களில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையின் அருகிலேயே துணைத் தலைவர் இருக்கை இருப்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்தது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு நகலும் அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு.
    • கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக சட்டசபையின் கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார்.
    • சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

    சென்னை:

    சபாநாயகர் அப்பாவு இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி கூடுகிறது. சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 77 பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருந்து வந்த ஒரு பெண் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர் அந்த கேனை பிடுங்கினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்பின்னர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பாளை மனக்கவாவலம்பிள்ளை நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரியவந்தது.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்ததாகவும், அவர்கள் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தான் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

    திசையன்விளை:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.

    முதல்பரிசு

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் இறுதி ஆட்டத்தில் வடக்கு ெரயில்வே மற்றும் சென்ட்ரல் ெரயில்வே அணிகள் மோதின.

    இதில் 39-26 என்ற புள்ளிக்கணக்கில் வடக்கு ெரயில்வே அணி வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த சென்ட்ரல் ரெயில்வே அணி ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த சவுத் சென்ட்ரல் அணிக்கும், 4-வது இடம் பிடித்த கிழக்கு ரெயில்வே அணிக்கும் தலா ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது.

    சபாநாயகர் அப்பாவு

    ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், கிரீன் ஆர்மி அணியும் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 41:30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.2 லட்சம் மற்றும் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த கிரீன் ஆர்மி அணிக்கு ரூ.1½ லட்சம் மற்றும் கோப்பையும் 3-வது இடம் பிடித்த சென்னை வருமானவரித்துறை அணிக்கும், 4-வது இடம் பிடித்த பெங்களூர் பரோடா வங்கி அணிக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் வெற்றி கோப்பைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு கோப்பைகளை வி.எஸ்.ஆர். சுபாஷ் மற்றும் வி.எஸ்.ஆர்.சுரேஷ் ஆகியோர் வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசை நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், 2-வது பரிசை ராதாபுரம் யூனியன் துணைத் தலைவர் இளையபெருமாள், 3-வது பரிசை மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, 4-வது பரிசை அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தாமகேஸ்வரன் மற்றும் மயோபதி குழும தலைவர் டாக்டர் ராமசாமி ஆகியோர் வழங்கினர்.

    பரிசளிப்பு

    பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார். 2-ம் பரிசு தொகையை ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் டென்னிசன், 3-வது பரிசு தொகையை உறுமங்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவலடி சரவணகுமார், கஸ்தூரிரங்கபுரம் பாலன் ஆகியோரும், 4-வது பரிசு தொகையை ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், சிதம்பராபுரம் பேபி முருகன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.

    பரிசளிப்பு விழாவில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு நிதியாக 2 ரூபாய் வருகிறது.
    • இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    தென்காசி:

    தமிழக சபாநாயகர் அப்பாவு குற்றாலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் இருந்து 1 ரூபாய் வரி மத்திய அரசுக்கு நாம் செலுத்தினால் 17 பைசா நமக்கு வரும்.

    ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு நிதியாக 2 ரூபாய் வருகிறது. ஏன் இந்த பாரபட்சம்?. மத்திய அரசின் நிதி தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை.

    சமீபத்தில் கூட அரசுடன் ஒரு நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக ரூ.1,600 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 1971-ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நன்றாக உள்ளது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    • சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
    • வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார்.

    சென்னை:

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா சென்னையில் நடந் தது. விழாவுக்கு வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். வி.ஜி.பி. ரவிதாஸ் வரவேற்றார்.

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா மலர் மற்றும் வி.ஜி.பி. ராஜாதாஸ் எழுதிய 'என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள்' என்ற நூலை சபா நாயகர் அப்பாவு வெளியிட்டார். மார்கிரெட் பாஸ்டின் எழுதிய சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம் நூலை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். முத்துக்குமாரசாமி எழுதிய வ.உ.சிதம்பரனார் நூலை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார்.

    விழாவில் சிறந்த 3 தமிழ்ச் சங்கத்துக்கு விருது, அன்புபாலம் கல்யாண சுந்தரம், பாடகர் வேல் முருகன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ஆண்டாள் பிரியதர்ஷினி, உள்பட 30 தமிழறிஞர்களுக்கு விஜிபி இலக்கிய விருதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    வி.ஜி.சந்தோசம் சென்னையை சேர்ந்தவர் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சென்னையை சேர்ந்தவர் அல்ல. நான், வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோசம் எல்லோருமே நெல்லையில் பிறந்து வளர்ந்து தாமிரபரணி தண்ணீரை பருகி, அதன்பிறகு சென்னையில் அடையாளத்தை கண்டவர்கள். தினத்தந்தியை எடுத்துக்கொண்டால் சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். பாரதியார், வ.உ.சிதம்பரனார் எல்லோருமே நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.

    வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் திருவள்ளுவர் சிலையை அமைத்து ஒரு சாமானியனால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அதற்காக ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படுகிறது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன் மூலம் சாமானிய வீட்டு பிள்ளையும் சர்வதேச தரத்துக்கு இணையான தரமான கல்வி கற்க முடியும். அதேபோல் தகுதியான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகையை கொடுக்க இருக்கிறார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை வெளிநாடுகளில் கடனாக வாங்கி இருந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது. விவசாயிகள் உணவு பொருட்களை விளைவித்து நமக்கு உயிர் கொடுக்கிறார்கள். அவர்கள் உணவு கொடுக்காவிட்டால் நம்மால் வாழ முடியாது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஜி.சந்தோசம் பேசுகையில், 'விஜிபி தமிழ்ச்சங்கம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் தமிழனாக பிறந்தேன். எனவே தான் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறேன். அதற்காக திருவள்ளுவரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அதன் மூலம் தமிழை வளர்த்து வருகிறேன்' என்றார்.

    விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், அவ்வை அருள், நாஞ்சில் பீற்றர், மல்லை சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்பட்டது. முடிவில் வி.ஜி.பி. ராஜாதாஸ் நன்றி கூறினார். உலகநாயகி பழனி தொகுத்து வழங்கினார்.

    • சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்ற பேரவை தலைவருக்கு மட்டும் தான் உண்டு.
    • ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்.பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் பதவி நீக்கம் செய்தார்.

    நெல்லை:

    பாளை சேவியர் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு வந்த சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமர் கோவில் இடிப்பு சம்பவம் தேச துரோக வழக்காக பார்க்கப்பட்ட நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்றோர் அமைச்சர் பதவியுடன் தான் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கினார்கள்.

    இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பதவியில் இருந்துகொண்டு தான் இந்த வழக்கை சந்தித்தனர். அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் உரிமை ஆளுநருக்கு இல்லை.

    அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை அவர் நான்கரை மணி நேரத்தில் தெரிந்து கொண்டுள்ளார்.

    ஆளுநருக்கு இருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும் தான் அவருக்கு உள்ளது.

    யார்-யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற பட்டியலை ஆளுநருக்கு கொடுத்தால் அதனை ஏற்று பதவிப்பிரமாணம் ஆளுநர் செய்து வைக்க வேண்டும்.

    அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம் அல்லது முதலமைச்சர் அவர்களை பதவியை விட்டு நீக்கலாம். ஆளுநர் அவர்களை நீக்க முடியாது. வேறு யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது.

    நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல் உறுதி செய்யப்பட்டால் அமைச்சர்கள் அந்த பதவியில் இருந்து விலக நேரிடும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த போது தண்டனை கிடைத்ததால் தானாகவே இந்த பதவியில் இருந்து விலகினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்ற பேரவை தலைவருக்கு மட்டும் தான் உண்டு.

    ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்.பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் பதவி நீக்கம் செய்தார். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளது.

    ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளேன். அவர் மிகவும் நல்ல மனிதர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். நேற்று நடந்த நடவடிக்கை கூட உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடு தான். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு தான் தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் வெளியேறினார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சிதான் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இந்திய அரசிய மைப்பு சட்டம் 159-ன் படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு மதச்சார்பற்ற நாடான இந்தியாவை மதச்சார்புள்ள நாடு என ஆளுநர் பேசுகிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரின் இந்த பேச்சு மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம். ஆளுநர் இது போன்ற பேச்சை தெரிந்து சொல்கிறாரா? தெரியாமல் சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. இந்த போக்கை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே தகுதி இல்லாத நபரை முதலமைச்சர் ஆக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதற்காக அப்போதைய பிரதமர், மத்திய அமைச்சரின் ஒப்புதலோடு ஆளுநரை திரும்ப பெற செய்தார். இதனை அறிந்த ஆளுநர், பதவி விலகிக் கொண்டார்.

    இதில் இருந்து அமைச்சரவை பரிந்துரையின்படி பணியாற்ற வேண்டிய கட்டாயமும், கடமையும் ஆளுநருக்கு இருப்பது தெரிகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அதிகாரங்களை ஆளுநருக்கு கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதுவே ஆளுநரின் பதவிக்கு மாண்பை தரும்.

    ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. டெல்லி சென்று வந்தார் என்பது மட்டுமே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது.
    • தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது.

    நெல்லை:

    பாளை சித்த மருத்துவக்கல்லூரி அருகே அமைந்துள்ள மேடை போலீஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள மேற்கு கோட்டைவாசல் பூங்காவில் ஓவிய பயிலரங்கு நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஓவியம் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கலை பண்பாட்டுதுறை உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன், ஆர்.டி.ஓ/ சந்திரசேகர், ஓவியர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    திராவிட மொழியின் முதல் மொழி தமிழில் இருந்து தொடங்கியது என முதலில் சொன்னவர் கால்டுவெல். இந்தியாவின் நாகரிகம் தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கியது என சொல்லிய தமிழக முதலமைச்சர் தாமிரபரணி நாகரிகத்தை கண்டறிய அகழாய்வு செய்ய உத்தரவிட்டார்.

    பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்து பண்பாட்டு நாகரிகத்தை அரசு காத்து வருகிறது.

    15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2.30 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நூவர் அருங்காட்சியகத்தில் மிக அழகாக பல வண்ண தொன்மையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

    ஓவியங்கள் பண்டைய வரலாற்று நாகரிகங்களை தாங்கி படித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டைவிட அழகாக நம் தமிழகத்தில் பல நூற்றாண்டு தொன்மையான ஓவியங்கள் இன்றளவும் பல கோவில்களில் காணப்படுகிறது.

    பண்டைய கால அற்புதங்கள் நிறைந்த இடங்கள் பாழடைந்து கிடந்ததை தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றப் பின்னர் புனரமைத்து அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கலை, மொழி போன்றவைகளுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் ஆட்சியை தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது. ஆனால் அதனை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. அதனை புனரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் வெள்ளையடித்து அதனை கெடுத்து விடுகின்றனர்.

    தஞ்சை பெரிய கோவில் சுவரில் இருக்கும் ஓவியங்கள் மீது தேர்வு எண்களை எழுதி வைக்கின்றனர். அந்த எண்களை குறித்து வைத்து கொண்டு அவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து விடலாம் என தோன்றும்.

    தொன்மைகள் குறித்து நமக்கு அக்கறை இல்லாததை இதுபோன்ற செயல்காட்டுகிறது. பல மொழிகள் தொன்மையாக இருந்தாலும் அதைப் பேசக்கூடிய நபர்கள் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் அரசு அந்த மொழிக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்து உதவுகிறது. கல்வெட்டுகளை படிப்பதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.

    வாழ்க்கை என்பது கலை. கலைஞர்கள் வாழ்க்கையில் இருந்துதான் கலையை கண்டெடுக்க முடியும். தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல் நிறைந்த இந்த உலகில் நாம் வாழக்கூடிய தகுதியை இழந்து வருகிறோம். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகும்.

    நம் கருத்துக்கள் எடுத்து வைக்கும் விஷயங்களுக்கு எதிராக வன்முறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்கள் வைக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக செயல்கள் நடந்து வருகிறது. இயற்கை பதிலடி கொடுக்கும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
    • “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    அந்த வரிசையில் 2023-ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

    இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா-வுக்கும், "பெரியார் ஒளி" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.ராஜாவுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

    2023-ஆண்டுக்கான வி.சி.க.-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் வருமாறு:-

    1. அம்பேத்கர் சுடர்-திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர், சி.பி.ஐ. (எம்.எல்).

    2. பெரியார் ஒளி-து.ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

    3. காமராசர் கதிர்-மு.அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.

    4. அயோத்திதாசர் ஆதவன்-ராஜேந்திரபால் கவுதம், முன்னாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு.

    5. மார்க்ஸ் மாமணி-கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)

    6. காயிதேமில்லத் பிறை-முனைவர் மோகன் கோபால், முன்னாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.

    7. செம்மொழி ஞாயிறு-தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.

    விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • இதுவரை 1,440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    மாதாந்திர உதவித்தொகை

    கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ஐ வழங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை இன்று வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து முந்தைய அரசு கிடப்பில் போடப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்துள்ளது. அடிக்கல் நாட்டிய பணி களை உடனடியாக தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    22 மாதத்தில்

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது சாதி சான்று மற்றும் வருமான சான்று உள்ளிட்டவை கேட்டு 4.38 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். தற்போது அவைகள் அனைத்தும் கொடுக்கப் பட்டு 785 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது.

    வருவாய் துறை அதிகாரிகள் இரவு, பகல் பார்க்காமல் உழைத்ததின் காரணமாகவே அரசுக்கு பாராட்டுகள் கிடைத்து உள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு

    அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு இது வரை 1440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளி களிலும் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    செப்டம்பர் 15-ந்தேதி தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை) சுகன்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமார தாஸ் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர். 

    • கோவை கார் வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது.
    • தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் 2-வது ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    தமிழக அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி ஆலோசனைகளை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வணிகர்களுக்கு உதவி செய்து வருகிறது.

    மாநில கவர்னர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். இந்தியா மத சார்பற்ற நாடு. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மறைத்து, மதசார்புள்ள நாடுதான் என்று திணிப்பது போன்று கவர்னர்கள் பேசுவது தவறானது.

    அரசியல் கட்சி பிரமுகர்களை போல ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தமிழக கவர்னர் பரப்பி வருவதும், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்பது போல சொல்வதும் சரியானது இல்லை.

    கோவை கார் வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருந்தால் அரசிடமோ, உள்துறையிடமோ அல்லது பிரதமர், ஜனாதிபதியை சந்தித்தோ புகார் தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை தமிழக கவர்னர் செய்கிறார்.

    சட்டத்துக்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×